நமது சேவைகள்

நமது வரலாறு

இந்திய திருநாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில அயோத்தி மாநகரில் சரயு நதிக்கரையில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய நன்னாளில் இருந்து எங்களுக்கும் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில் போல தென்னகத்திலும் ஒரு ராமர் கோயில் மற்றும் ஆசிரமம் கட்டுவதற்கும் அதேபோல் அயோத்தியிலும் ஒரு ஆசிரமம் அமைப்பதற்கும் ஒரு ஆவல் உண்டானது.

ஏற்கனவே நாங்கள் ஒரு அமைப்பாக, கூட்டு முயற்சியாக, அயோத்தி கோயில் கட்டுமான பணி நடக்கும் பொழுது எங்களால் ஆன பங்களிப்பை கோயில் கட்டுமான பணிக்கு செய்துள்ளோம். மேலும், தென்னக அயோத்தியை உருவாக்கும் பொருட்டு நாங்கள் மேற்படி தமிழ்நாடு ஜெயராம் யாத்திரை அசோசியேஷன் என்ற கூட்டினை பெயரில் 2024 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கத்தின் பதிவு செய்து முழு முயற்சியாக தென்னகத்தில் ராமர் கோவில் மற்றும் ஆசிரமங்கள் அமைக்க முழு ஈடுபாட்டுடன் முயற்சி எடுத்து வருகிறோம்.

ஸ்ரீ ராமஜெயம்

பழம்பெருமையும் பண்டைய காலச்சுவடுகளின் தொடர்ச்சியுமான மகத்துவத்தைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் புனித நகரமாம் அயோத்தி. உத்திரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு, ராமபிரானாக மனித ரூபத்தில் அவதரித்து, மனித குலத்தின் உயர்வையும், தர்மத்தின் மகத்துவத்தையும் உலகறியச்செய்த தலமாக விளங்குகிறது.

பகவான் விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களில் ஏழாவது அவதாரமாகிய ஸ்ரீராமன், மனித வாழ்க்கை எவ்வாறு உயர்ந்ததாக அமையவேண்டும் என்பதைத் தன் வாழ்வால் எடுத்துக்காட்டினார். மனிதன் எவ்வாறு சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், நடக்க வேண்டும் என்பதையும், ஒரு சிறந்த ஆட்சி எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியதே ராமராஜ்யம் ஆகும். அது வெறும் ஆட்சி முறையல்ல; தர்மத்தை நிலை நிறுத்தும், அமைதி நிலைக்கும், இறையருள் பொங்கும் வாழ்வியல் முறையாகும்.

இறைவனோடு ஒன்றிணைந்து வாழ்வதிலே உள்ள ஆனந்தம் அளப்பரியது. ராமராஜய்மாக விளங்கிய அயோத்தியில் வாழ்ந்த மக்கள் இறைநிழலில் ஞானம் பெற்று, அதன் மூலம் முக்தியை அடைந்தனர். இதனால்தான், இந்துக்களின் முக்தி ஸ்தலங்களில் முக்கியமான தலமாக அயோத்தி விளங்குகிறது.

இந்தப் புனித நகரத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே ஆழமான ஆன்மீகப்பிணைப்பு உண்டு. இன்றளவும் தமிழ் மக்களின் வாழ்வியலில், பெயர்களில், மரபுகளில் ஸ்ரீராமன் கலந்திருக்கிறார். நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரால் கி.பி.1885 ஆம் ஆண்டு அயோத்தியில் சத்திரம் அமைக்கப்பட்டு, பகவான் ஸ்ரீராமருக்கான கோயிலும் கட்டப்பட்டது. இன்றளவும் தமிழர்களின் ராமன் என அன்புடனும் அழைக்கப்படும் அந்தத் தலத்தில், தமிழர்களால் தேர்த்திருவிழா நடத்தப்படுவது பெருமைக்குரியது.

காலச்சுழற்சியில் கரைந்து போயிருந்த ராமராஜ்யத்தின் மகத்துவம் இன்று மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. காசி மற்றும் ராமேஸ்வரம் சென்றால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்று நம்புகிறோம். அதுபோல், புனித பூமியான அயோத்தியில் காலடி வைத்தாலே பூர்வஜென்ம வினைகள் நீங்கி, தலைமுறைகளுக்கு புண்ணியம் சேரும்; முக்தி கிடைக்கும் என்பது உறுதி.

உலகில் பிறந்த ஒவ்வொரு இந்துவும் ஒருமுறையாவது ராமஜென்மப்பூமியான அயோத்தியைத் தரிசித்து, இறையருள் பெற வேண்டும். ஸ்ரீராமன் கால் பதித்த அந்தப்புண்ணிய பூமியில் நம் பாதங்களும் பதிய, நாமும் பாவ விமோசனம் அடையலாம்.

முக்தி ஸ்தலமான அயோத்தியில், இறைவனுக்கு அருகில் இளைப்பாறவும். மனமுருக வழிபடவும், உலகத்தமிழர்களுக்கென நாம் உருவாக்கப்போகும் புனித இடமே ‘ராமா ஆஸ்ரம்’. நாமும் நம் தலைமுறைகளும் இறையருளில் இன்புற்று வாழ, அயோத்தியில் ஒரு சிறு தமிழ் ஆன்மீகத்தளமும், தமிழகத்தில் அதற்குச் சமமான தென்னக அயோத்தியையும் உருவாக்க வேண்டும் என்பதே நம் உறுதியான நோக்கம் ஆகும்.

இதற்காக அனைத்து வசதிகளுடனும், பக்தர்கள் தங்கி வழிபடக்கூடிய ஒரு ஆன்மீக மையமாக ஆசிரமம் அமைக்கப்படுகிறது. அந்தத் தெய்வீகத்திட்டத்தின் வடிவமே ‘ராமா ஆஸ்ரம்’.

இது சரயு நதிக்கரையிலும், தமிழகத்தின் புனிதமான காவிரி நதிக்கரையிலும் அமையவுள்ளது.

இது ஒரு கட்டிடம் அல்ல: இது ஒரு ஆன்மீகப்பாலம்

இது ஒரு திட்டம் அல்ல: இது ஒரு தலைமுறைக்கனவு.

இது ஒரு ஆசிரமம் அல்ல: இது இறைவனுடன் இணையும் வாழ்வின் வாயில்.

ஸ்ரீராமன் அருள் எப்போதும் நம்முடன் இருப்பதாக.

Our Donors

Thiru. R. Radhakrishnan
Bodipatti

 

Smt. Kovamma Kichanna
Amaravathi Dam

 

 

ராமர் ஆஸ்ரம் - சிறப்பு அம்சங்கள்

யாகசாலை

யாகம் (வேள்வி) என்பது புனிதமான பொருள்களைத் தீயில் அர்ப்பணித்து, மந்திர உச்சாடனங்கள் மூலம் பிரபஞ்ச சக்தியைப் பெற்று, உடல் ஆரோக்கியம், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் ஆசைகளை நிறைவேற்றுதல் போன்ற பன்முகப் பயன்களை வழங்குகிறது. மேலும் இது நற்குணங்களை வளர்த்து, ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.

யாகம் செய்வதின் பயன்கள்

யாகத்தீயில் இருந்து வெளிப்படும் மந்திர ஒலிகள் மற்றும் யாகத்தின்போது வெளிவரும் வெப்பம் மற்றும் புகை அவ்விடத்தில் உள்ள எதிர்மறைச்சக்திகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றன.

யாகத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் மன ஒரு நிலைப்பாடு, மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலைக் குறைத்து, மன அமைதியைத் தருகிறது.

ஆன்மீக உயர்வு, ஆசைகளை நிறைவேற்றுதல், நற்குணங்கள் வளர்த்தல், மற்றும் பித்ருதோச நிவர்த்தி ஆகியவைகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் அமைதி நிலவ வழிவகுக்கிறது.

மன்ற உறுப்பினர்களுக்காகவும். அவர்களின் குடும்பத்திற்காகவும், மன்ற உறுப்பினர்களின் தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப அமைதிக்காகவும் சிறப்பு யாகம் செய்யப்படும்.

கோசாலை

இந்துத் தர்மத்தின் தன்னலமற்ற சேவையின் சின்னமாக கோசாலை அமைகிறது. இந்துக்களால், பசுவானது தெய்வத்தின் மறு உருவமாகவே பார்க்கப்படுகின்றது. பசுக்கள் தெய்வமாகவும், அதன் கோமியம் மற்றும் பால் புனிதமாகவும், சாணம் போன்றவை ஸ்தலங்களைத் தூய்மைப்படுத்தவும் இந்துக்களால் பயன்படுத்தப்படுகின்றது. பசுக்களில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்ற உன்னதமான நம்பிக்கையில், இந்துக்களால் பசுக்கள் பெரிதும் போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்பசுக்கள் இனம் அழிந்து விடாமல் காக்கவும், கைவிடப்பட்ட பசுக்களைப் பராமரிக்கவும், இறைவனுக்குத் தானம் செய்யப்பட்ட பசுக்களை சிறந்த முறையில் பராமரிக்கவும், அவ்வாறு பராமரிக்கப்படுகின்ற பசுக்களின் மூலம் கிடைக்கப்பெறும் பால், அருகிலுள்ள கோவில்களுக்கு அபிஷேகம் செய்யவும், ஏழை, எளிய மக்களுக்கு உணவு தானமாகவும் வழங்கப்பட்டு, பசு தானம் செய்த குடும்பத்திற்கு இறைவனின் அருள் கிடைக்கப்பெற்று இல்லங்களில், லட்சுமி கடாட்சம் கிட்டும் என்பதே இறைவன் நமக்கு காட்டும் வழியாகும்.

தியான மண்டபம்

தியான மண்டபம் மன அமைதி, தியானம் மற்றும் ஆன்மீகத்தேடலுக்கான இடமாகும். ஆழ்ந்த மனமார்ந்து தியானத்தால் உடல்சக்தி பெற்று மற்றும் மனம் இலகுவாகி இறையருளைப் பெறலாம். இவ்வகைத் தியானத்தால் இறைவனின் ஸ்பரிசத்தை உணரவும், பிரபஞ்ச ஞானம் பெறவும் மற்றும் மந்திர உச்சாடனம் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவதால், நாம் இறைவனின் பாதம் தொடுவதை நம்மால் உணரமுடியும். இத்துடன் மன அமைதி அடைந்து, நல்ல தூக்கம் கிடைக்கப்பெற்று, மன அழுத்தம் முற்றிலுமாகக் குறைந்து போகும். இத்தகைய சிறப்புகளுக்காக இயற்கையான மற்றும் மிகுந்த அமைதியான சூழல் கொண்ட தியான மண்டபம் அமைப்போம். இது தனி நபர் முன்னேற்றம், ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன அமைதிக்கான மையமாக விளங்கும்.

நினைவுக்குடில்கள்

நமது புண்ணிய பூமியாம் ஸ்ரீராமா ஆஸ்ரம வளாகத்தில் நமது மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாரின் நினைவாக நினைவகக்குடில்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டு, காலம் சென்ற அவர்களின் வரலாறு ஆனது, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, குடில்களின் முகப்பில் வைக்கப்படும்.

குடில்களானது இரண்டு படுக்கை அறைகளுடனும், சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு, வகுக்கப்பட்ட காலங்களுக்குச் சம்பந்தப்பட்ட குடில்களின் உரிமையாளர்களுக்குத் தங்கிச் செல்வதற்கு ஒதுக்கப்படும். மற்ற நாள்களில் பராமரிப்பிற்காகவும், ஆஸ்ரம நன்மைக்காகவும், அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும். நமது காலஞ்சென்ற குடும்ப உறுப்பினர்களின் நினைவாகக் கட்டப்படும் இத்தகைய நினைவுக்குடில்களானது காலங்காலமாக அனைவராலும் நினைவு கூறப்படும், போற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

முதியோருக்கான ஆன்மீக இல்லம்

இது ஒரு சாதாரண முதியோர் இல்லம் அல்ல. இங்கு தங்கும் முதியோர்களுக்கு ஆன்மீகச்சூழலில், இறைவழிபாட்டின் மூலம் அமைதியான வாழ்க்கையை, உயர்ந்த சேவை மனப்பான்மையுடன் வழங்கும் புனித இல்லமாக இது அமையும்.

நமது தமிழ் மக்களின் தாய், தந்தைகள் தனது வயதான காலத்தில் இறைவனுக்கு அருகில் இறை வழிபாடு செய்தும், இறைவனுக்குத் திருப்பணி செய்தும் இறைவனோடு வாழ்வதிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

எனவேதான் அதனைக் கருத்தில்கொண்டு, வயதான தாய், தந்தையர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நமது ஆசிரம வளாகத்தில் முதியோருக்கான ஆன்மீக இல்லம் அமைக்கப்பட்டு, நவீன மருத்துவ வசதிகளுடன் 24 மணி நேரமும் கண்காணிப்புகளுடன் கூடிய தனிப்பணியாளர்களை அவர்களுக்கென்று அமர்த்தி, அன்பாகக் கவனித்துக்கொள்ளப்படும். அவ்வப்போது தேர்ந்த மனநல மருத்துவர்களைக் கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

நமது தாய், தந்தையர்களின் இறுதிக்காலம் முழுவதும் ஸ்ரீராமனின் தெய்வீக அருள் கிடைத்து, அவர்கள் இறைவனின் நிழலில் மனநிறைவாக வாழ்க்கை முழுவதும் வாழ நமது ராமா ஆஸ்ரம் செயல்படும்.

தங்கும் விடுதி வசதி

பகவான் ஸ்ரீராமரைத் தரிசனம் செய்ய அயோத்திக்கு வருகை தரும் யாத்ரிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் தங்கி வழிபட்டுச்செல்ல. சுத்தமான மற்றும் ஆரோக்கியமான தமிழ் உணவுகளுடன் நல்ல கனிவான உபசரிப்புகளுடன் கூடிய தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தப்படும். மேலும் 24 மணி நேர மருத்துவ வசதியுடன் விளையாட்டு உபகரணங்கள், பொழுதுபோக்கு சாதனங்களும் தங்கும் விடுதியில் உருவாக்கித்தரப்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்குச் செல்லவும் வாகன வசதி செய்து தரப்படும்.

உடற்பயிற்சிக் கூடம்

மருத்துவக் கண்காணிப்புடன், யாத்ரீகர்கள் மற்றும் ஆஸ்ரமவாசிகள் உடல்நலத்தைப் பேண இயற்கைச்சூழலில் பூங்கா அமைத்து, உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடம் ஏற்படுத்தப்படும்.

ஆன்மீகச்சுற்றுலா ஏற்பாடு

ஆசிரமத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள புண்ணியத்தலங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும், ஆன்மீகச்சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும்.

தென்னக அயோத்தியாம் ஸ்ரீராமா ஆஸ்ரம் சார்பாகவும், உறுப்பினர்களின் பேரிலும். இந்தியாவில் உள்ள அனைத்து விதமான கோவில்களுக்கும் புனித யாத்திரை செல்லவும். கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும் சிறந்த முறையில் வழிவகை செய்யப்படும். பயண ஏற்பாடு முதல் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை வசதிகளும், வழிவகைகளும் பகவான் ஸ்ரீராமனின் அருளோடு வழங்குவதே எங்களது தலையாய் கடமையும், நோக்கமும் ஆகும்.

இத்தகைய உயர்ந்த சிறப்பு அம்சங்களுடன் தென்னக அயோத்தியை திருச்சி மாநகரில் புனிதமான காவிரி நதிக்கரையில் அமைப்பதும், அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமா ஆஸ்ரம் அமைப்பதுமே நமது தலையாய் இலக்காகும். தமிழகத்தில் ராமன் வழிபாட்டை விரிவுபடுத்தவும். ஒவ்வொரு கிராமம் முதல் நகரம் வரை ராம ராஜ்யத்தின் தர்மமும், அமைதியும் நிலைநிறுத்தவும் நாம் ஒன்றிணைய வேண்டும்.

தமிழக இந்துக்களே! இந்த ஒப்புயர்வான எழுச்சிப்பயணத்தில் ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க. வாருங்கள் கரம் கோர்ப்போம்: ராமனைக் நெஞ்சில் ஏந்துவோம்.

இது ஒரு திட்டமல்ல: இது ஒரு ஆன்மீக எழுச்சி.

இது ஒரு முயற்சியல்ல: இது ஒரு தலைமுறையின் பணிக்கூற்று.

இறை நாமம் ஒலிக்க தர்மம் நிலைக்க முக்தியும், மோட்சமும் அடைய ஒன்றிணைவோம் தமிழா!